நண்பர்கள்

Wednesday, February 13, 2013

அவள் பெயர் காதல்


0o0


என்னுள் நீ

வாசிக்கும் மெலடி

அனைத்திற்கும்

அர்த்தம்

சொல்லி போகிறது

நம் காதல்


0o0


நீ தொலைந்து

நானாகும் காதலிடம்

இதயம் தொலைத்து

கண் தேடும் காதல்

தோற்றுவிடுகிறது


0o0


அதிகமாய்

தாகம் எனக்கு

அதுதனிய

நிறைய வேண்டும்

உன் காதல்

0o0


திரு திருவென்று

முழித்து உன்னிடம்

மாட்டிக் கொள்வதில்

உள்ள சுகம்

திருடன் நான்

என சொல்வதில்

இல்லை


0o0


இலையுதிர் கால

காதல் சருகுகளில்

மிதிபடும் கணமாய்

நம் பிரிவு

பெய்யும் இதமான

தூறல் மழை

நம் காதல்


0o0


நான் அமரும்

இடம் நோக்கி

விழுகிறது

உன் காதல்

நீ சென்ற

திசை நோக்கி

வருகிறது

என் பிரியம்


0o0


அனைத்து நட்புகளுக்கும்

காதலர் தின வாழ்த்துக்களுடன்…


மோகன் தாஸ்

Monday, September 17, 2012

வெள்ளையாய் சில இரவுகள்



வேண்டிய அனைத்தும்
வரிசையாய் நிற்க
ஒவ்வொன்றாய்
நிறைவேற்றினாள்
குழந்தை
கோவிலில்

0-0

மதியம் மூணு மணி
வரை நிற்கும்
உணவு வரிசை
கொடுப்பவனுக்கு வயிறு
இல்லையோ என
சிந்திக்க வைக்கிறது
சாப்பிட்ட மனது
0-0

களித்து பேச
ஒன்றுமில்லா
தருணங்களில்
“மச்சான் அப்புறம்”
வந்து தாங்கி
நிற்கிறது இங்கே
பல நட்புகளை
0-0
சொல்ல விரும்பும்
பல வரிகள்
ஓரிரு சொல்லின்
முடிவிலேயே இறந்து
விடுவதால்
உணர்ச்சியற்ற உணர்வுகளால்
நிறமற்ற நீர் ஊற்றி
எழுதப்படுகிறது இங்கே
காதல் வரிகள்

0-0

சுகம் பெற்றபின்
தூர எறிவது வாடிக்கை
அவன் சில
வாக்குறுதிகளையும்
அவள் பல
வாய் சண்டைகளையும்

செவ்வாய் வாழ்த்துக்களுடன்

- மோகன் தாஸ்



Wednesday, September 12, 2012

நிழல் தேடும் வெயில்

எப்பொழுதும்
மௌனத்தை தாங்கும்
உன் நிழல் என்
பின்புலம் அறைய
நிறமற்ற வெளிகள்
அனைத்தும்
கிறுக்கும்
அழியா நாட்குறிப்புகளை
அடுக்கி வைத்து
உயிர் வாழ்வது
என் கடமை

-௦-௦-

வரிகள் வரைந்து
எழுதும் செப்புக்கவிதை
காற்றோடு கரைய
உன்னை பார்த்து
பூத்துக்கிடக்கும்
ஒற்றைக்கால் பூமி
தடவும் வெக்கமில்லா
மேகம் நான்
-௦-௦-

புரிந்து பேச நான்
அறிமுகமில்லா பிறைகவிஞன்
சிரித்து பேசி
களவு புரியும்
இடைதெரு
விலாக்கம்பனும்
நீயே என் பிச்சை என
ஒருவன் கருஅதிர கத்தும்
மீதியில்லா எச்சம்

-௦-௦-

சத்தமில்லா உடுப்பு
ஒன்றை
மேலே சாத்திவிட்டு
விளகினுள் எரியும்
திரி கதிரை விளக்கம் கேட்டு
குறி ஒன்றை
சொல்லி செல்லும்
அறுபது கிழவி
என்ன செய்வாள்
கூறு போட நான் இங்கே

Thursday, August 9, 2012

சலித்து போன அலைகள்



தினம் கொட்டும்
இலைகளுக்கு
பிரிவின் அருமை
தெரியதொடங்கியபோது
மரம் முழுதாய்
இறந்திருந்தது

%%


முந்தி வரும் சிறு
அலையும்
பின்னால் வரும்
பெரிய அலையும்
தேடி சலித்திருந்தது
அனிதா குட்டி
தொலைத்த
கரடி பொம்மையை



%%


செதுக்கியவன்
கெஞ்சி கேட்ட
கடன் பற்றி பின்னிரவில்
பேச தொடங்கியிருந்தது
சிலை
முதலாளியிடம்




%%

ரசித்து கேட்ட இளையராஜா
பாடல் எதிர் வீட்டு
குக்கரின் நான்காவது
விசில் பட்டு பலமான அடி
லேசான காயத்துடன்
இசை நலம்


%%

வெறுமை
பட்டு வெளுத்து
போயிருந்தது
பூட்டியே கிடக்கும்
கொல்லைபுற
தாழ்வரை

Tuesday, August 7, 2012

எட்டாவது காதல்




ஏன் முறைக்கிறாய்
தமிழ் உனக்கு
வராது என்றாய்
தமிழ் நீ வா
என்றேன்

௦-௦-௦

கண்களால் நீ
கணிதம் பற்றி
பேசுவாய்
காதல் பற்றியெரியும்
எனக்கு

௦-௦-௦

நீ எழுதிய
எழுத்துக்கள்
தன்னை விட உன்னையே
அதிகம் ரசிக்கின்றன

௦-௦-௦

உன் கை புத்தகம்
பெரும் மோட்சம்
உன் பை புத்தகம்
பெறுவதில்லை என
என் முகபுத்தகம்

௦-௦-௦

நீ ஒரு கடினமான
வினாத்தாள்
காப்பியடிப்பதற்குள்
கையும் களவுமாக
எனை அணைத்துவிடு
௦-௦-௦


நல்லவனாகவே பதில்
சொல்லி அமர
விரும்பும் நான்
திருடனாகிவிகிறேன்
உனை பார்க்கும்
அரை நொடி

௦-௦-௦

மழைக்கு கூட
ஒதுங்காதவன்
காதலுக்காக
ஒதுங்கியவன்
நான்

௦-௦-௦

நீ ஒன்பது படித்து
பத்து ஆனாய்
நானோ உன்னை படித்து
பித்து ஆனேன்

Wednesday, August 1, 2012

கீழே விழுந்தவை..


இரண்டு எழுத்துகள் மட்டும் என்
கதையிலிருந்து
வெளியே குதித்து
என்னுடன் அருகே அமர்ந்து கொண்டது

என் நினைவுகள் செல்லும் வேகத்திற்கு ஈடு
கொடுத்து பறந்து வந்தன அவை
திடீரென மாய வலையில் சிக்க
என் நினைவுகளோ தண்ணீராய் கீழே சிந்தியது

பிழைத்தோம் என சிரித்தன
என் நினைவுகள்
பறக்க திரும்பும்போது என் கதையில்
அடுத்த இரண்டு
எழுத்துகளை காணோம்

0-0-0

பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது

கடலால் எழுதப்பட்ட காற்று ஒன்று
அருகில் சென்று தன் வார்த்தைகளை
அதனுடன் விளையாட கொடுக்கிறது

வண்டுகள் ஏமாறும் நேரம்
கள்ளக்காதலன் காற்றால்
இழந்து கொண்டிருக்கிறது கற்பை
இன்னுமொரு பிச்சியிடம்
விரும்பித்தான் என காற்று சொல்லும்
என்னிடம் நானும்
அதையே அப்படியே நம்புவேன்

பிச்சி பூ ஒன்று
தன் மகரந்தத்தை வைத்து வாசலில் நிற்கிறது

0-0-0

Monday, July 23, 2012

தமிழ் எனக்கு...





தமிழ் எனக்கு

ஜனனித்த மழலையின்
உள்ளங்கால் ஸ்பரிசம்

பொசுக்கும் வெயிலில்
ஜில்லென்று இரு கை தண்ணீர்

கடுக்க நின்று பார்த்து முடிக்கும்
தெய்வ தரிசனம்

தெரியாமல் தொடங்கி தெரிந்து
தின்னும் பல்ப குச்சி

தொட்டு பார்த்து குட்டி போடும்
நடுப்பக்க மயிலிறகு

இறுக்கமாய் பின்னலிட்ட சிறுமி
ரெட்டை ஜடை

ஆறு விரல் குழந்தையின் பளீரென்ற
அசட்டு சிரிப்பு

வளைத்து போடும் புள்ளி கணக்கு
தெரியா சிக்கு கோலம்

ஆள் அரவமற்ற வெற்றிடத்தில்
எதிர்பாரா ஆக்சிஜன்

தமிழ் எனக்கு....

ஒழுகும் சளி துடைக்கும்
மூணாவது தெரு கறுப்பி முகம்

அறியா பருவம் அள்ளி தரும்
புடிபடா குறுகுறு காதல்

அறுபதில் இருபதை தரும் பால்யகால
குட்டி சுவர்  நட்பு

வலி தந்து சிரிக்க செய்யும்
சிசுவின் கால் அசைவு

அவள் அவசரமாய் மூட முயலும்
அழகு மார்பகம்

விரும்பி அணியும் கோடு போட்ட
காட்டன் சட்டை

எழுபது வயதில் திரும்பி வரும்
குழந்தை மனசு

இடப்பக்க மார்பில் விரும்பி வாங்கும்
கொள்ளு பேரன் கால் உதை

காத்திருந்து அவள் சொன்ன
அந்த "நானும் உன்னை காதலிக்கிறேன்"

தமிழ் எனக்கு....
இன்னும் நிறைய...